சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் - மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்

Ayodhya land dispute, SC forms 3 member mediator panel

by Nagaraj, Mar 8, 2019, 12:21 PM IST

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தில் தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம் . ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு 8 வாரத்தில் விசாரணை நடத்தி சமரச தீர்வு காண அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அயோத்தி நில விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ராம ஜென்மபூமி பாபர் மசூதி இடத்தில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை பங்கீடு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையின் போது, மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண்பது குறித்து கேள்வி எழுந்தது. முஸ்லீம் அமைப்புகள் சம்மதித்த நிலையில், சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் குழுவில் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் அமைந்துள்ள பைசாபாத்தில் 8 வார காலத்தில் விசாரணை நடத்தி சமரசத் தீர்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. விசாரணை பற்றிய தகவல்கள் செய்தி, ஊடகங்களுக்கு கசியக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

You'r reading சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் - மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை