குட்கா ஊழல் ஆவணங்களை ஒப்படைக்க மறுப்பது ஏன்? - ராமதாஸ் கேள்வி

குட்கா ஊழல் ஆவணங்களை ஒப்படைக்க மறுப்பது ஏன்? - ராமதாஸ்

Jul 18, 2018, 16:51 PM IST

குட்கா ஊழல் ஆவணங்களை அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்க அரசு மறுப்பது ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramadoss

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கு தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் இருந்து, சி.பி.ஐ. அமைப்புக்கு மாற்றப்பட்டு விட்ட பிறகும், அந்த ஊழலில் பணம் பரிமாற்றப்பட்டது குறித்த விசாரணையை முடக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக இந்த ஊழல் குறித்த ஆவணங்களை அமலாக்கப்பிரிவுக்கு வழங்க அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வழக்கை முதலில் கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்த நிலையில், பின்னர் உயர் நீதிமன்ற ஆணைப்படி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஊழல் குறித்த வழக்குகளில் குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் நோக்குடன் சி.பி.ஐ விசாரிக்கும் நிலையில், ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சட்டவிரோத பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்துவது வழக்கமாகும்.

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவினரும் இந்த ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் குட்கா ஊழல் குறித்த சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில், பெயர் தெரியாத அதிகாரிகள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ள நிலையில், அதனடிப்படையில் விசாரிக்க அமலாக்கப்பிரிவால் முடியவில்லை.

மாறாக, கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்களும், அவர்களின் விவரங்களும் இடம் பெற்றிருப்பதால் அதனடிப்படையில் மட்டுமே அமலாக்கப் பிரிவு விசாரிக்க முடியும். அதற்காக, குட்கா வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்கும்படி அமலாக்கப்பிரிவு விடுத்த வேண்டுகோளைத் தான் தமிழக காவல்துறை நிராகரித்துள்ளது. இதற்காக காவல்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.

குட்கா ஊழல் குறித்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஏற்கனவே சிபி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதால், இன்னொரு மத்திய அமைப்பிடம் அந்த ஆவணங்களை வழங்க முடியாது என தமிழக காவல்துறை கூறிவிட்டது. ஒரு வழக்கு குறித்த ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் வழங்கிவிட்டதால், அமலாக்கப்பிரிவிடம் வழங்க முடியாது என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

Vijayabaskar

கடந்த காலங்களில் ஒரே வழக்கின் ஆவணங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மத்திய அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இந்த வழக்கு ஆவணங்களின் நகல்கள் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் இருப்பதால், அதை அமலாக்கப்பிரிவினரிடம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், ஆவணங்களைக் தராமல் அரசு அலைக்கழிப்பதற்கு காரணம் விசாரணையை முடக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

குட்கா ஊழல் வழக்கு விசாரணையை முடக்கும் முயற்சியில்தான் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த எம்.டி.எம் குட்கா ஆலைகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், குட்கா விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.

அவற்றை 2016 ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் ஒப்படைத்த வருமானவரித்துறை, அவற்றின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியது. ஆனாலும், ஓராண்டுக்கும் மேலாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீண்ட நெடியப் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த விசாரணையையும் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது குட்கா ஊழல் குறித்த அமலாக்கப்பிரிவு விசாரணையை அரசு தடுக்கிறது.

அமலாக்கப்பிரிவு விசாரணை தீவிரமடைந்தால் குட்கா ஊழல் மூலம் சேர்த்த பணத்தைக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்; இந்த ஊழல் மற்றவர்களுக்கு உள்ள தொடர்பும் அம்பலமாகிவிடும் என்பதால் தான் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதை அரசே செய்வது மன்னிக்க முடியாததாகும்.

குட்கா ஊழலை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் வருமானவரித்துறையிடமும், சி.பி.ஐ.யிடமும் உள்ளன. அவற்றின் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவது உறுதி. குட்கா வழக்கு குறித்த ஆவணங்களை அமலாக்கப்பிரிவுக்கு கொடுக்காமல் மறுப்பதன் மூலம் இந்த வழக்கில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் சொத்துக்கள் முடக்கப் படுவதை தாமதப்படுத்த முடியுமே தவிர தடுக்க முடியாது.

ஆனால், ஆவணங்களை கொடுக்க மறுப்பது விசாரணையை தடுக்கும் குற்றமாகிவிடும். எனவே, அத்தகைய பழிக்கு ஆளாகாமல், குட்கா ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவிடம் கையூட்டு தடுப்புப் பிரிவு ஒப்படைக்க வேண்டும்.

You'r reading குட்கா ஊழல் ஆவணங்களை ஒப்படைக்க மறுப்பது ஏன்? - ராமதாஸ் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை