திரும்பத் திரும்ப மனு செய்தால் அபராதம் தான் - ஸ்டெர்லைட்டை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

SC rejects sterlite petition to open the premises and warns, will fine if moves again

by Nagaraj, Apr 12, 2019, 13:57 PM IST

பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை வெடித்து போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு, ஆலைக்கு சீல் வைத்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆலையைத் திறக்க அனுமதி வழங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.மேலும்,தமிழக அரசும் வேதாந்தா நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்'' என்றும் தெரிவித்தனர்.

ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இதற்கிடையே பராமரிப்புப் பணிகளுக்காகவும் கழிவுகளை அகற்றவும் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்றுகூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் இதுபோன்று மீண்டும் மனுத்தாக்கல் செய்தால், வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

You'r reading திரும்பத் திரும்ப மனு செய்தால் அபராதம் தான் - ஸ்டெர்லைட்டை எச்சரித்த உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை