மோடியை திருடன் என விமர்சித்து விட்டு கூட்டணி ஆட்சியில் பங்கு வகிப்பது ஏன்? சிவசேனா மீது ஆர்.எஸ் எஸ். பாய்ச்சல்!

RSS criticised Shiv sena for Alliance with BJP

by Mathivanan, Dec 27, 2018, 16:06 PM IST

பிரதமர் மோடியை திருடன் என விமர்சனம் செய்யும் சிவசேனா, மத்தியிலும், மராட்டியத்திலும் கூட்டணி அரசில் பங்கு வகிப்பது ஏன்? என ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக சாடியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க.வுக்கும் சிவசேனாவுக்கும் சமீப காலமாக ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இத்தனைக்கும் மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் அமைச்சரவையில் சிவசேனா அங்கம் வகிக்கிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வை சகட்டுமேனிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்தும், மீண்டும் கூட்டணி தொடர நிபந்தனைகளையும் விதிப்பதால் இரு கட்சிகளிடையேயான உறவில் மெகா விரிசல் ஏற்பட்டுள்ளது.

மோடியை சவுகிதார் சோர் ஹே (நாட்டின் காவலன் ஒரு திருடன்) என சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்ததை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அப்படியே முன்மொழிந்திருந்தார். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முடிவை உடனே அறிவித்தால் கூட்டணிப் பேச்சு எனவும் நிபந்தனை விதித்தார்.

இது பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை சூடேற்றியுள்ளது. இந்நிலையில் மராட்டிய மொழியில் வெளியாகும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடான தருண் 'பாரத்' தலையங்கத்தில் சிவசேனாவை கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியாகியுள்ளது.

ஆட்சியில் பங்கு வகித்துக் கொண்டே மோடியை திருடன் என்றால் சிவசேனா அமைச்சர்களும் திருடர்கள் தானா? ராகுல் காந்தி தான் சிறு பிள்ளைத்தனமாக கூறினார் என்றால் அதே வார்த்தையை பயன்படுத்துவதா? அப்படியெனில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது பதவி சுகத்திற்காகவா? என சரமாரியாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை திடீரென சிவசேனா கையிலெடுத்திருப்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்குத் தான் எனவும் ஆர்.எஸ்.எஸ்.நாளிதழ் தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

You'r reading மோடியை திருடன் என விமர்சித்து விட்டு கூட்டணி ஆட்சியில் பங்கு வகிப்பது ஏன்? சிவசேனா மீது ஆர்.எஸ் எஸ். பாய்ச்சல்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை